இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012



இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012
  • டிசம்பர் 2011 வரையிலான கணக்கீட்டின்படி 55.5 கோடி இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2011ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக இணைக்கப்பட்டவை 30 கோடி.
  • மொத்த மின்னஞ்சல்களில் 71 சதவீதம் ஸ்பேம் (Spam) என்ற வேண்டாத குப்பைகளே நிறைந்திருக்கின்றன.
  • டாட் காம் (Dot Com) என்ற துணைப்பெயருடன் அமைந்த இணையதளங்களின் எண்ணிக்கை மட்டும் 9.55 கோடி.
  • 8.69 கோடி இணையதளங்கள் நாட்டின் பெயரை ( .uk, .in, .us போன்றவை) பின்னிணைப்பாகக் கொண்டவை.
  •  உலகில் 210 கோடிப் பேர் இணையப் பயன்படுத்துகின்றனர். இதில் 92.22 கோடிப் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
  •  இணையத்தைப் பயன்படுத்துவோரில் 45 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்.
  •  உலகம் முழுவதும் 590 கோடிப் பேரிடம் கைபேசி உள்ளது. இதில் 120 கோடிப் பேர் கைபேசி இணைய இணைப்பு பெற்றவர்கள்.
தகவல் ஆதாரம்: இண்டெர்நெட் வேர்ல்ட் ஸ்டேட்ஸ், ஜனவரி 2012
Related Posts with Thumbnails

திக்குத் தெரியாத காட்டில்..

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

புதிய ஊர், அறிமுகமில்லாத மனிதர்கள், புரியாத மொழி என்று திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில் நாம் செல்ல வேண்டிய இடத்தை, மற்றவர் உதவியின்றி நாமே கண்டறிந்து செல்ல உதவும் தொழில்நுட்பம்தான் ஜிபிஎஸ்.

குளோபல் பொசிஸனிங் சிஸ்டம் (Global Positioning System) எனப்படும் இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து வழி காட்ட அல்லது நீங்களே வழியை அறிந்து செல்ல உதவுகிறது.
1940ஆம் ஆண்டில் திசை காட்டும் கருவிகளுக்கு தரைப்பகுதி இலக்குகளைக் காட்ட பயன்படுத்தப்பட்ட மின் காந்த அலை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 1960ல் அமெரிக்கக் கடற்படைக்காக செயற்கைகோள்களைப் பயன்படுத்தி திசை அறிய உருவாக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தில் ஏவுகணைகளை துல்லியமாக ஏவவும், கடற்படை, விமானப்படைக்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் 1983இல் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கதவுகள் திறந்து விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டு முதல் ஜிபிஎஸ் பயன்பாட்டிற்கான 60 செயற்கை கோள்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதில் 31 செயற்கைக் கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 24 மட்டுமே இச்சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற செய‌ற்கைகோள்கள் ஸ்பேராக உள்ளன.
தற்போது இவைதான் வழிகாட்டும் சிக்னல்களை பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு இடத்தினை துல்லியமாக அறிய இந்த 24இல் 3  அல்லது 4 செயற்கைகோள்களின் மின் காந்த அலைகள் நமக்குத் தேவைப்படும். இவ்வலைகளின் வீச்சும், நேரமும் கணக்கிடப்பட்டு இருப்பிடம் கணிக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் நுட்பத்திற்கு அடிப்படையாக இருப்பது டாப்ளர் விதியாகும். அதன்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கிச் செலுத்தப்படும் மின் காந்த அலை, குறைந்த தூரத்தில் உள்ள இடமாக இருந்தால் நெருக்கம் அதிகமான கதிர்வீச்சையும், அதிக தூரமாக இருந்தால் நெருக்கமற்ற கதிர்வீச்சையும் கொண்டிருக்கும் என்பதாகும்.
வாகனங்களில் செல்வோருக்கு வழிகாட்டியாகவும், வாகனங்களை நிர்வகிப்போருக்கு இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் வகையில், வாகனம் செல்லும் பாதை, வேகம், எரிபொருள் அளவு, இடையில் நின்ற இடம், நேரம் உள்ளிட்ட பல கூடுதல் விபரங்களையும் சேர்த்து  வழங்கிடும்படியாக இத்தொழில்நுட்பம் இன்று பலவகையிலும் மேம்பட்டிருக்கிறது.  இப்பணியில் ஜிபிஎஸ் ரிசீவர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட கருவிகள் நமக்கு உதவுகின்றன. (வாகனங்களுக்கான  ஜிபிஎஸ் ரிசீவரின் விலை சுமார் 7000 ஆகிறது. இச்சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.)
உலகில் பல நாடுகளும் பொது மக்களுக்கான ஜிபிஎஸ் சேவையை அமெரிக்
காவிடமிருந்தே பெறுகின்றன. தவிர்க்க முடியாத, பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய இத்தொழில்நுட்பத்தை ஒவ்வொரு நாடும் தனக்கென்று தனியாக உருவாக்கிக் கொள்வது அவசியத் தேவையாகும். அவ்வகையில் தங்களுக்கென தனித் தொழில்நுட்பத்தை ரஷ்யா குளோனாஸ் (GLONASS) என்ற பெயரில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது, சீனா பெய்டூ (Beidou) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. கூடுதலாக காம்பஸ் (COMPASS) என்ற பெயரில் உலக அளவிலான ஜிபிஎஸ் சிஸ்டத்தை 2020ஆம் ஆண்டிற்குள் உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. கலிலியோ (Galileo) என்ற பெயரில் ஜரோப்பிய யூனியனும், கியூஇசட்எஸ்எஸ் (QZSS) என்ற பெயரில் ஜப்பானும் உருவாக்கி வருகின்றன.

இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இஸ்ரோ இந்தியன் நேவிகேஷனல் சிஸ்டம் (IRNSS) என்ற நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன்படி 6 மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் அனுப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட விக்கி உரலிகளைப் பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Global_Positioning_System
http://en.wikipedia.org/wiki/U.S._Department_of_Defense
http://en.wikipedia.org/wiki/Indian_Regional_Navigational_Satellite_System
http://en.wikipedia.org/wiki/GLONASS
http://en.wikipedia.org/wiki/Galileo_(satellite_navigation)
http://en.wikipedia.org/wiki/QZSS
http://en.wikipedia.org/wiki/Beidou_navigation_system
.


Related Posts with Thumbnails

கணினியில் ஓவியம் வரைய உதவும் எளிய மென்பொருள்


கணினியில் ஓவியம் வரைபவர்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா, இல்லஸ்ட்ரேட்டர் எனப் பல வகை வணிக மென்பொருள்கள் உள்ளன.
ஆனால் ஓவியம் வரைவதற்கென்று இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓரிரு மென்பொருள்களில் தற்போது வந்துள்ள ஸ்மூத் டிரா (Smooth Draw) மென்பொருள் சிறந்ததாக உள்ளது.

இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உள்ளிட்ட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.
2 எம்பி அளவேயுள்ள இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கம் செய்ய: http://www.smoothdraw.com/
. Related Posts with Thumbnails

மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள்!


மூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கானது என்பதையும் தாண்டி இன்று கருத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சமூகப் பணிகளுக்கு என்று பல பரிமாணங்களுடன் மாறியிருக்கிறது.
தொடக்கத்தில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.  ஆனால் இன்று அந்நிலை மாறி சமூகவலைத்தளக் கணக்கு வைத்திருப்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை கேட்கும் இளைகஞர்களைவிட ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிபிளஸ், ஆர்குட், யுடியூப் கணக்கு குறித்த பேச்சே அதிகமாக இருக்கிறது.
வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழல்கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினர் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சலை விட வேகமான செய்திப் பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது
தான். தற்போது கையடக்க கணினியாக வலம் வரும் ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இன்று சுமார் 314 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன. இதில் ஒரு நபரே நான்கு, ஐந்து மெயில் ஐடிகள் வைத்திருப்பதும் உள்ளடங்கும்.  சமூக வலைத்
தளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடிப் பேரும், குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடிப் பேரும், கூகுள் பிளஸ்ஸில் 9 கோடிப் பேரும், சீனாவைச் சேர்ந்த சமூக வலைத் தளங்களான ரென்ரென் 17 கோடிப் பேரையும், கியூ ஜோன் 50 கோடிப் பேரையும், சினா வைபோ 25 கோடிப் பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று தி ரியல் டைம் ரிப்போர்ட் டாட் காம் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட கணக்கீடு மின்னஞ்சல் பயனர் எண்ணிக்கைக்கு இணையானதாகும். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சுமார் 24700 கோடி என்றும், சமூக வலைத்தளங்களில் அதே ஒரு நாளில் சுமார் 42 கோடி புதிய பதிவுகளும், 19 கோடி புகைப்படப் பதிவேற்றங்களும், 73 கோடி கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக உலக அளவிலான சமூக வலைத்தளக் கணக்கெடுப்பு டிசம்பர் 2011 குறிப்பிடுகிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் பொருட்களை விளம்பரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.வர்த்தகம் சார்ந்து இல்லாமல் இரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் எனப் பல உதவிகரமான சேவைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து புரட்சி, வால்ஸ்ட்ரீட் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்கும்  ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களே தகவல் தொடர்பு காரணிகளாக செயல்பட்டன.இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளும் இத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவும் அத்தகையதொரு சட்டத்தை இயற்றும் முயற்சியாக சோபா (SOPA ACT) சட்டத்தைக் கொண்டு வர முனைந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sources:
http://www.slideshare.net/stevenvanbelleghem/social-media-around-the-world-2011
http://therealtimereport.com/2012/01/20/social-networking-stats-google-hits-90-million-users-rltm-scoreboard/
.
. Related Posts with Thumbnails

wibiya widget